Tuesday, August 14, 2012

“திராவிடர் விடுதலைக் கழகம்” இது புதிய பெயரல்ல, புதிய முன்னெடுப்பு

12-08-2012 ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்கு, ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில், “இலக்கு நோக்கிய இலட்சியப் பாதையில் இணையும் தோழர்களின் சந்திப்பு”, கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முன்னதாக, கழகத் தலைவர் தலைமையில் தோழர்கள் திரளாக சென்று, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமை செயற்குழு உறுப்பினர்களில் 51 உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். நேரில் வர இயலாத குமரி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சதா, நெல்லை மாவட்ட அமைப்பாளர் காசிராசன், கடலூர் மாவட்டத் தலைவர் வடலூர் வெங்கடேசன் ஆகியோர் தொலைபேசி வழியாக தங்கள் ஆதரவை கழகத்தலைவரிடம் கூறியிருந்தனர்.
மூத்த பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு மாரப்பனார் தனது மகன் உடன் கலந்துகொண்டார், மேலும் ஈரோடு விடுதலை வாசகர் வட்டத் தலைவர் அறிவுக்கன்பன் என்கின்ற குப்புசாமி, பெரியார் பெருந்தொண்டர் ஆசிட் தியாகராசன், சென்னை வழக்கறிஞர் வீ.இளங்கோவன், மாவட்ட பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உட்பட பல முன்னணி தோழர்கள் என திரளாக திரண்டிருந்தனர்.
கோவை மாவட்டத்தில் இருந்து மூன்று தனிப் பேருந்துகள், மற்றும் மகிழுந்துகள், தனித்தனியாக தொடர்வண்டி, பேருந்து ஆகியவைகள் மூலமாக சுமார் 350 தோழர்கள் கலந்துகொண்டார்கள். அதேபோல சென்னையில் இருந்து இரண்டு தனி பேருந்துகள், புதுவையில் இருந்து இரண்டு தனிப் பேருந்துகள் மூலமாகவும் தோழர்கள் வந்திருந்தனர். பல்லடம், திருப்பூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் இருந்து தனி சிற்றுந்துகள் மூலமாக வந்திருந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்திருந்தவர்களுமாக ஏறத்தாழ 1500 பேர் என்ற அளவில் திரண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், முதலில் கோபி இராம.இளங்கோவன் கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்பைக் கூற அனைத்து தோழர்களும் அதை எழுச்சியோடு வழிமொழிந்து முழக்கமிட்டனர். ஈரோடு இரத்தினசாமி வரவேற்புரை ஆற்றினார். புதுவை லோகு.அய்யப்பன் துவக்க உரை ஆற்றினார். அடுத்ததாக, நாம் ஏன் பெரியார் திராவிடர் கழகத்தை விட்டுவிட்டு வேறு பெயரில் இயங்குகிறோம் என்று விளக்கி பேசிய விடுதலை க.இராசேந்திரன் நமது கழகத்தின் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார், மேலும் முதலில் 200 பேர் கூடுவோம் என்று எதிர்பார்த்து பின்னர் நாட்கள் நெருங்க நெருங்க 500 பேர் வருவார்கள் என்று உறுதி செய்து தான் இந்த மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இன்று இவ்வளவு பேர் வந்திருப்பது நாம் சென்று கொண்டிருக்கிற பாதை மிகச் சரியானது என்பதை உறுதிச் செய்கிறது என்றும் பேசினார்.
இங்கு பொதுச்செயலாளர் விளக்கி பேசிய செய்திகளின் உண்மைகளை நீங்கள் ஆய்ந்து பார்க்கவேண்டும் என்றும் உங்களிடம் இதுவரை சொல்லப்பட்ட செய்திகள் உங்களுக்காக மட்டும் சொல்லப்பட்டதே தவிர இது பரப்புவதற்கு அல்ல. தேவைப் படும் போது நமது தோழர்களோடு விவாதம் செய்து கொள்ளலாமே தவிர இது பத்திரிக்கைக்கான செய்தியும் அல்ல எனவே ஏடுகளில் யாரும் வெளியிடக் கூடாது என்பதையும் முதலில் வேண்டுகோளாக வைத்து தனது உரையை தொடங்கிய கழகத்தலைவர் கொளத்தூர் மணி, பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு நமக்கு இருந்தும் புதிய பெயரில் இயங்க வேண்டிய காரணத்தையும், அவசியத்தையும் விளக்கிப் பேசினார். மேலும் தனது உரையில்…..
புதிய பெயர், புதிய கொடி, புதிய செய்தி ஏடு ஆகியவைகளோடு இயங்கலாம் என்று தான் முதலில் முடிவு செய்தோம். பெரியார் முழக்கம் ஏடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். இதுவரை பயன்படுத்தி வந்த கொடியை (தூத்துக்குடி பெரியார் பாசறையின் கொடி என்பதால்) நீங்களே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டார். எனவே நாம் அமைப்பிற்கு புதிய பெயர் தான் வைக்க வேண்டும்.
பெரியாரின் கொள்கைகள் சுயமரியாதையும், சமதர்மமும் ஆகும். பன்னாட்டு சுரண்டல்கள் அதிகரித்து கொண்டிருப்பதால் நாம் அதற்கு எதிராக போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம், எனவே “சுயமரியாதை சமதர்மக் கழகம்” என்பதுதான் பொருத்தமான பெயராக இருக்கும் எனக் கருதினோம். ஆனால் ‘திராவிடர்’ என்ற சொல் தான் தமிழர் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது என்று பலரும் பேசி வருகிற இந்த சூழலில்,நாம் திராவிடர் என்ற சொல்லை கைவிடுவது, போதிய புரிதலின்றி இதுவரை திராவிடர் என்று வைத்திருந்ததை இப்போதாவது தவறை உணர்ந்து சரிசெய்து கொண்டதைப் பாராட்டுகிறோம் என்று சிலர் எழுதுவதற்குப் பயன்படலாமே தவிர பெரும்பாலான உழைக்கும் மக்களை கேவலப்படுத்தி பிரித்துவைத்திருக்கிற ஆரியத்துக்கெதிரான பண்பாட்டுப் புரட்சிக்குப் பயன்படாது என்பதால் நம்மை அடிமைகளாய் வைத்திருக்கும் ஆரியத்துக்கு எதிரான குறிச்சொல்லான ‘திராவிடர்’ என்ற சொல் அமைப்பின் பெயரில் அவசியம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எனவே “திராவிடர் சுயமரியாதை சமதர்மக் கழகம்” என்று வைக்கலாமா ”திரவிடர் சுயமரியாதைக் கழகம்” என்று வைக்கலாமா என்று ஆலோசித்தோம். இதில் சுயமரியாதை என்ற சொல் வடமொழி என்பதால் தன்மதிப்பு என்று தமிழ் படுத்தி, “திராவிடர் தன்மதிப்புக் கழகம்” என்று வைக்கலாமா என்றும் கருதினோம், ஆனால் சுயமரியாதை என்ற சொல்லில் இருக்கும் வீரியம் தன்மதிப்பு என்பதில் இல்லை. எனவே இதுவும் கைவிடப்பட்டது.
சமூக விடுதலை இல்லாமல் பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம்; அரசியலில் விடுதலை இல்லாமல் இந்திய தேசியத்திற்கு அடிமைப்பட்டிருக்கிறோம்; பொருளாதாரத்தில் பன்னாட்டிற்கு அடிமையாக இருக்கிறோம். எனவே நமக்கு இப்போது தேவையாக இருப்பது பார்ப்பன – இந்தியதேசிய – பன்னாட்டு சுரண்டலில் இருந்து விடுதலையே. எனவே “திராவிடர் விடுதலைக் கழகம்” என்று முடிவு செய்தோம். இது புதிய பெயரல்ல, புதிய முன்னெடுப்பு என்றும் அறிவித்தார்.
பிற்பகல் நிகழ்ச்சியின் துவக்கமாக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (ம.தி.மு.க) வாழ்த்துரை வழங்கினார். ம.தி.மு.க நகர செயலாளார் பூங்கொடி சாமிநாதன் அவர்கள் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தார். ஆசிட் தியாகராசன் அமைப்பை பாராட்டிப் பேசினார், மாவட்டத்திற்கு ஒருவராக கீழ்க்கண்ட தோழர்கள் உரையாற்றினார்கள்: திருப்பூர் துரைசாமி, கோவை பன்னீர்செல்வம், சேலம் (மேற்கு) முல்லைவேந்தன், நாமக்கல் சாமிநாதன், காஞ்சி டேவிட் பெரியார்,மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், திண்டுக்கல் நல்லதம்பி, தூத்துக்குடி அம்புரோசு, சென்னை உமாபதி, கிருஷ்ணகிரி குமார், திருச்சி புதியவன், கன்னியாகுமரி சூசை , வடலூர் கலியமூர்த்தி, கரூர் காமராசு, சேலம் (கிழக்கு) டேவிட், பெரம்பலூர் தாமோதரன், விழுப்புரம் வெற்றிவேல், திருநெல்வேலி அன்பரசு, பொள்ளாச்சி விஜயராகவன், தஞ்சை பாரி, நாகை மகேஷ், வேலூர் திலீபன், சேலம் (மாநகரம்) பாலு,
இறுதியாக மாநில வெளியீட்டுச் செயலாளர் சூலூர் தமிழ்ச்செல்வி, மாநில பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், ஆகியோர் உரையாற்றினார்கள். கழகத் தலைவர் நிறைவுரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில பொறுப்பாளர் சிவக்குமார் நன்றியுரை ஆற்றினார்.
சில மாவட்டகழகங்கள் கழக வளர்ச்சி நிதி அளிப்பதாக உறுதி அளித்து (அடைப்புக் குறிக்குள் உள்ள தொகை) முதல் தவணையாக கீழ்க்கண்டவாறு நிதி அளித்தார்கள்.
சேலம் மேற்கு – 3,00,000 (5,00,000)
ஈரோடு – 1,00,000 (5,00,000)
சென்னை – 1,00,000 (3,00,000)
புதுவை – 50,000 (2,00,000)
சேலம் கிழக்கு – 70,000 (1,00,000)
திருப்பூர் – — (1,00,000)
கோவை ———- (25,000)
இரா.வீரமணி (சேலம்) – 25,000
ஆசைத்தம்பி (கள்ளக்குறிச்சி) – 10,000
ஆசிரியர் செங்கோட்டையன் – 2,000 (10,000)
மதுரை வாசுகி – 1,000 (10,000)
வடலூர் கலியமூர்த்தி – 1,000 (10,000)
தமிழர் முன்னணி (கரூர்) – 1,000
சேலம் மேற்கு மாவட்டம் சார்பாக, காவலாண்டியூர் விஜயகுமார், சேலம் கேம்ப் அருள்செல்வம், மேட்டூர்(ஆர்.எஸ்) அரவிந்த், டைகர் பாலன் ஆகியோர் இணைந்து கழகத் தலைவருக்கு அறுபதாயிரம் ரூபாய் மதிப்பிலான மடி கணினியை வழங்கினார்கள்.
சசிக்குமார், மோகன்ராஜ், சண்முகசுந்தரம் ஆகியோரது நிறுவனத்தின் சார்பாகவும், விசு, அர்ச்சுணன், ஆகியோரது நிறுவனத்தின் சார்பாகவும் உணவிற்கு தேவையான பொருளுதவிகளைச் செய்தனர்.
ஜெயராமன், நிவாசு, தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஒலி பெருக்கி அமைத்துக்கொடுத்தனர்.
முதல் நாளே வந்திருந்த தோழர்களுக்கு இரவு உணவு, அடுத்தநாள் காலை உணவு, முற்பகலில் தேநீர் ஆகியவைகளை தயாரிக்கும் பொறுப்புகளை தோழர்கள் பிரேமா, சுகுணா, பேபி மோகன் ஆகியோர் ஏற்றுக்கொண்டு சிறப்பாக பணியாற்றினார்கள். மதிய உணவு சென்னை தோழர் மோகன் மேற்பார்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டுப் பணிகளை, ஈரோடு இரத்தினசாமி தலைமையில், மாவட்ட தலைவர் நாத்திகஜோதி, மாவட்டச்செயலாளர் இராம.இளங்கோவன் ஆகியோரோடு இணந்து தோழர்கள் சிவக்குமார், சிவா, சுப்ரமணி, குமார், வெங்கட், மோகன், திருமுருகன், பூவதிராஜ், இரமேஷ், அழகன், சண்முகசுந்தரம், இரமேஷ்குமார், சண்முகப்பிரியன், செல்வராசு, செல்லப்பன், இளம்பிள்ளை சந்திரசேகர் ஆகியோர் செய்தனர்.
செய்தி: இளம்பிள்ளை கோகுல்
20 படங்கள்…

periyarthalam12082012-1

Thursday, July 19, 2012

அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார்.

ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா!


அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார்.


ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction”

அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?

"ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."

(“I know UNO. I know – you know UNO. But you don’t know I know UNO” )

இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ் தேசியவாதி , தமிழ் அறிஞர். ஆகவே தாய்மொழி தமிழைத் தவிர்த்து / சிதைத்து ஆங்கிலப் புலமையுள்ளவராக வர முடியும் என்பது ஒரு கனவு என்பதை புரிந்து கொள்வார்களா?

Monday, July 9, 2012

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.

இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.

இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை...

Sunday, June 17, 2012

காரல் மார்க்ஸ் வாழ்க்கை - ஒரு சிறுகுறிப்பு



Karl Marx




தந்தை: ஹெர்ஷல் மார்க்ஸ்.


தாய்: ஹென்ரிட்டா.


பிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி - 664 இலக்கமிட்ட வீடு.


மதம்: யூத மதம்.


சொந்த நாடு: பிரெஞ்சு.


பிறந்து வளர்ந்தது: ஜெர்மன்.


உடன் பிறந்தவர்கள்: 8 பேர்.


தந்தையை பற்றி: சாதாரணமான வக்கீலாக இருந்து குடும்ப வறுமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர்.


பள்ளி படிப்பு ஆரம்பித்த காலம்: 12 வயது.


பள்ளி படிப்பு முடித்த காலம்: 25-08-1835.


கல்லூரி வாழ்க்கைத் தொடக்கம்: பான் பல்கலைக்கழகம், வக்கில் படிப்பு(தந்தையின் விருப்பத்திற்காக)


கல்லூரி வாழ்க்கை: பான் நகரில் சமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறினார்.


கல்லூரி இறுதி வாழ்க்கை: தனது ஒழுங்கீனமான வாழ்க்கைக்கு காரல் மார்க்ஸின் தந்தையால் முடிவு எழுதப்பட்டது.


காதல் வாழ்க்கை:


காதலியின் பெயர்: ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.


காதலியிடம் இரசித்தது: உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக...


காரல் மார்க்ஸின் தோற்றம்: காணச் சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி அவரது கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர்.


ஜென்னியின் தோற்றம்: ரைன் லாந்தின் மிகச் சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானிய பெண்.


காதல் உருவாக்கம்: ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். ஜென்னியின் தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.


ஜென்னி இரசித்த ஆணின் அழகு: அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் அழகு!!!


மார்க்ஸின் கூற்று: ஜென்னி எனும் ஒரு அசாதாரணமான பெண் தன் வாழ்வில் வர வேண்டுமென்றால், தானும் தனது வாழ்க்கையும் அசாதாரணமானதாக இருக்க வேண்டும் எனும் எண்ணம். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம்.


இரண்டாவது கல்லூரி வாழ்க்கை:


ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க ஆரம்பித்தார். அந்த பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது. தொடர்ந்த படிப்பின் ஆர்வம் காரணமாக ஜென்னியைப் பற்றியே மறக்க வைத்தது.


ஜென்னியின் காதல்: 


“என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல” மற்றும் “நீ அவனை மறந்து விடு” போன்று மார்க்ஸின் பெற்றோர் கூறிய வார்த்தைகள் அவளை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் அவருக்கு ஒரு காதல் கடிதம் மார்க்ஸிடம் இருந்து வந்தது. அதை அவள் தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள். கண்ணீர் ததும்பியதால் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. அவள் கண்களில் இருந்து “மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன” . அவற்றிற்கு காரணமான வரிகள் “இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி... ஜென்னி என்றால் காதல்....”


தொழில்: 


பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.


திருமண வாழ்க்கை:


ஜென்னிக்கு 29 வயதாகி விட்டது. தனது இளமையின் பாதி வாழ்க்கையை தூய காதலின் பொருட்டும், அவரது கனவாம் உலக மக்களின் நன்மைகளின் பொருட்டம் தியாகம் செய்து இருந்தாள். அதன் முடிவாக 1843ம் ஆண்டு ஜீன் 19ம் நாள் காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற இரு இதயங்கள் இணைந்தன. அந்த திருமணம் எளிமையுடனும், அழகுடனும் நடந்தேறியது. அவர்கள் திருமணத்துடன் அவர்கள் அறியாமலேயே இன்னும் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன.


1. உலகின் தலைசிறந்த காதலுக்கான இலக்கண புத்தகம் மூடிவைக்கப்பட்டது.


2. உலகின் தலைசிறந்த குடும்ப வாழ்க்கைக்கான புத்தகம் திறக்கப்பட்டது.


தொழில் புரட்சி: உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என மார்க்ஸ் ஆணித்தரமாக கூறியதோடு இல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இதைப்பற்றி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”. இதன் காரணமாக “முன்னேற்றம்” பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. ஜெர்மன் அரசு மார்க்ஸை நாடு கடத்த உத்திரவிட்டது. அப்போது அவருக்கு “ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை... அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லிவிட்டால் போதும் அவர் எந்தத் தடையும் இல்லாமல் வாழலாம் அந்த ஒரு வார்த்தை... மன்னிப்பு”!!!


நாடு மாற்றம்: சீறிப்பாயும் ஏவுகணைக்குப் பின்னால் பாயும் நெருப்பைப் போல், மார்கஸின் பின்னிருந்து இயக்கிய சொல் புரட்சி. சில நாட்களிலேயே மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்து குடியேறினார். “பெல்ஜியம் அரசு நடுங்க ஆரம்பித்து. 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து ஒரு நாடே பயந்தன என்றால் இந்த இளைஞனின் எழுத்தும் சிந்தனையும் எத்தகைய வீரம் உடையதாக இருக்கும். “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது.


கம்யுனிஸ்ட்கள்: இந்த சூழ்நிலையில் ஒத்த கருத்துக்களை உடைய நெசவுத் தொழில் அதிபர் மகனான ஏங்கல்ஸ் மார்கஸ் உடன் சேர்ந்தார். இவர்கள் இருவரின் இணைவு “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது”. அதன் பெயர் தான் “பொதுவுடமைச் சங்கம்”. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர்.


இதன் பிண்ணனியாக “லண்டன் மாநகரத்தில் பிரமாண்டமான நட்சத்திரமாக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த முதல் கம்யூனிஸ்ட் சங்கம் உதயமானது”. அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுக்க தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய கம்யுனிஸ்ட் அடுத்த வருடமே இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தங்களது புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்ஸீம் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.


இதன் விளைவாக, 1848ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பாரீஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்னன் லூயி பிலிப் தப்பியோடினான். அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் நாட்டின் மன்னன் தன் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டான். அதே நேரத்தில் மார்க்ஸீம் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜென்னியை அந்த நாட்டின் “தேக விற்பனை பெண்” கைதிகளுடன் அடைத்தனர். அந்த இரவு அவளுக்கு நரகமாக இருந்தது. 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல முறை பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் கூறியது,


“எல்லா நாடும் என் நாடே!


எல்லா மக்களும் என் மக்கள்!!


நானோர் உலக மகன்!!!”


சோதனைக் காலம்: வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால், சோதனைகளிலேயே வாழ்க்கை ஓடினால் என்ன ஆகும்? மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி... ஓரே ஒரு அடி... “சலிப்பின் காரணமாக ஜென்னி பின் வாங்கியிருந்தால் கூட உலக வரலாறே திசை மாறியிருக்கும்”.


இறுதியாக மார்க்ஸ் தனது புகலிடமாக இலண்டன் வந்தார். உலகின் பணக்கார நாடான இலண்டனில் அவர்க்கு பிரச்சனை வீ்ட்டுக்குள்ளயே முளைத்தது. பசி என்ற இரண்டு எழுத்து அவரது வீட்டினுள் நுழைந்தது. அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பசி என்றால் நன்கு அறியும் வயது. குழந்தைகளுக்கும், மார்கஸீக்கும் பரிமாறி விட்டு பட்டினி கிடக்க ஆரம்பித்தாள் ஜென்னி. இதனால் ஜென்னியின் தனங்களில் பால் வற்றத் துவங்கியது. ஒரு காலக் கட்டத்தில் தனங்கள் சுருங்கி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்று இரவு மார்க்ஸின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் மட்டும் இல்லாமல் பிரபு குடும்பத்தில் பிறந்த ஜென்னியின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலித்தது.


இதற்கிடையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கொடுமைக்கார எஜமானியால் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் ஜென்னியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அபகரித்தனர். இந்த “பெருங்கொடுமை கொலை வெறியோடு அவர்களது மூன்று குழந்தைகளையும் தின்று தீர்த்தது”. இதை விட ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் நேர்ந்திராது. இந்த கொடுமையான சமயத்தில் ஜென்னி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை”.


தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் துயருற்ற இந்தக் காலக்கட்டத்தில் தான் “உலகத்தின் பொருளாதாரம்” பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார் மார்க்ஸ். 1867 செப்டம்பர் 14, உலகத் தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தர விடிவெள்ளி முழுமையாக உதயமான நாள். மார்க்ஸ் எனும் இயந்திரத்தின் 15 ஆண்டுகளின் வியர்வை துளிகள் எழுத்துருக்களாகி காகிதங்களில் பிரசுரமாகி “மூலதனம்” எனும் புத்தகமாக வெளிவந்தது. வெளியான நாள் முதலே “மூலதனம்” உலகமெங்கும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இதைத் தொடர்நது மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாயின. இன்றளவும் உலகின் தலைச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக “மூலதனம்” கருதப்படுகிறது.


இந்த சமயத்தில் ஜென்னி தன் தாயின் இறப்பு காரணமாக ஜெர்மன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் மனைவியின் பிரிவை இவ்வாறு கூறினார்.


உன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதை கண் கூடாகக் பார்க்கிறேன். ஒரே ஒரு முறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக் கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகி விடும். அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது.


மூலதனம் நூல்: உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை!!! பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.


இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலின் விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இதைத்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” எனும் நூலில் தெளிவுபடுத்தி தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.


பிடித்த விஷயம்: புகைப்பிடிப்பது, பால் கலக்காத கருப்பு காபி குடிப்பது மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி.


பிடிக்காத விஷயம்: பிச்சைப் போடுவது. “பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது எவ்வளவு மேலான விஷயம்”.


மனைவியின் இறப்பு: 1881ம் அண்டு, இரக்கமற்ற டிசம்பர் மாதத்தில், உலகத்துக் காதலையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்த ஜென்னி எனும் மலர் பூமியில் உதிர்ந்தது.


மார்க்ஸின் இறப்பு: 1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.


“யூதனாகப் பிறந்தார்!


கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!


மனிதனாக இறந்தார்!!!


காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்................”.

Monday, December 5, 2011

ஐயப்பா நீ பொய்யாப்பா!!!!!!!!!!!!!!!

பம்பை நதி பாலகனே
மாசில்லா மனிகண்டனே
சபரிமலை வாசனே
ஐயம் தீர்க்கும் ஐயப்பனே ......
சபரி மலைலேயே குடி இருக்கும்
ஐயப்பனே உனக்கு அவர்களின்
ஐயம் தீர்க்க சக்தில்லையோ .....
இல்லை நாடிவருபவர்களை
ஏமாற்றுவதில் வல்லவனோ நீ ......
முல்லைப் பெரியாற்றின்
சிக்கலை சீர்செய்ய முடியாதவனா
நீ ....
உனக்கு இருமுடி எதற்கு ....
உன்னைப் பெற்ற பரமசிவனும்
பார்வையற்றுப் போனானோ ........
இல்லை அவனும் பலனற்று போனானோ ????
தமிழனுக்கு நீர் வழங்குவதற்கு .....
-----முரளிகிருஷ்ணன் சின்னதுரை

Monday, October 24, 2011

தற்போதைய செய்திகள்உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் விவரம் 2011

சென்னை, அக்.24: தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் பெற்ற மொத்த வாக்குகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
அதிமுக - 2,22,42,131 (74.6%)
திமுக - 36,39,625 (12.2%)
தேமுதிக - 6,22,537 (2.1%)
காங்கிரஸ் - 4,88,342 (1.6%)
பாமக - 3,73,327 (1.3%)
பிஜேபி - 2,03,976 ( 0.7%)
மதிமுக - 1,62,992 (0.5%)
சுயேட்சைகள் - 18,06,407 (6.1%)

Sunday, October 2, 2011

பெண்களெல்லாம் பெரியோரில்லையா?

“பெரியோர்களே, தாய்மார்களே...!’’



- இப்படித்தான் ஆகப் பெரும்பாலான பொதுக் கூட்டங்களில், கருத்தரங்குகளில் தலைவர்களும் மற்ற பேச்சாளர்களும் தங்களது பேச்சைத் தொடங்குகிறார்கள்.



குறிப்பிட்ட பேச்சில், தாங்கள் வலியுறுத்தும் கருத்தில் அவர்களில் எத்தனை பேர் உண்மையான விசுவாசத்துடன் இருக்கிறார்கள், எத்தனை பேர் வெறும் கைதட்டல் மோகத்துடன் பேசுகிறார்கள் என்பது மக்கள் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய மர்மம். இங்கே நாம் விவாதிக்க எடுத்துக் கொள்வது அந்த “பெரியோர்களே தாய்மார்களே’’ என்ற தொடக்க விளிப்புச் சொற்களைப் பற்றிதான்.

தங்களது அனுபவ முதிர்ச்சியால் வழிகாட்டுகிற பெரியோர்களையும், அன்றாடம் வயிற்றில் சிசு, இடுப்பில் தண்ணீர்க்குடம், தோளில் குடும்பம், மனதில் துயரம் என சுமந்து கொண்டே இருக்கிற தாய்மார்களையும் விளித்து, வணங்கி பேச்சைத் தொடங்குவது நல்ல நாகரீகம்தான்.



ஆனால், கேள்வி ‘அப்படியானால் தாய்மார்க ளெல்லாம் பெரியோர்கள் இல்லையா’ என்பதுதான்.



ஆண்களை மட்டுமே “பெரியோர்களே’’ என்ற மரியாதைக்கு உரியவர்களாக முன்னிலைப்படுத்துகிற ஆணாதிக்கச் சிந்தனையின் தாக்கம் இதில் வெளிப்பட வில்லையா? உரையாற்றுகிற அந்த மனிதர் ஆணாதிக்கத்தை எதிர்ப்பவராக, பெண்ணுரிமைக்கு உணர்வுப்பூர்வமாய்க் குரல் கொடுப்பவராகவே கூட இருக்கலாம். ஆனால் அவரையுமறியாமல், சிறு வயதிலிருந்தே கேட்டும் பேசியும் வந்த பழக்கத்தின் காரணமாக இவ்வாறுதான் தமது பேச்சைத் தொடங்குகிறார். இவ்வாறு தாய்மார்களை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியது - பொதுமை சார்ந்த தாய் வழிச் சமூக அமைப்பை உடைமை சார்ந்த தந்தை வழிச் சமூக அமைப்பு ஒடுக்கியதன் ஒரு வெளிப்படையான ‘மொழி அடையாளம்’ எனலாம்.



சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு சிறிய அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நான் பேச அழைக்கப்பட்டேன். சற்று வித்தியாசமாகப் பேச்சைத் தொடங்க எண்ணியவனாக, “நண்பர்களே, சகோதரிகளே’’ என்று விளித்துப் பேசி முடித்தேன். கூட்டம் முடிந்து கலைகிறபோது என்னிடம் வந்த பெண் சிரித்துக்கொண்டே கேட்டாள்: “அதென்ன நண்பர்களே, சகோதரிகளே என்று ஆரம்பித்தீர்கள்? அப்படியானால் நாங்களெல்லாம் உங்களுக்கு நண்பர்கள் இல்லையா?”



சிரித்துக்கொண்டே விடைபெற்றேன் என்றாலும் என் மனதில் ஒரு ஆழமான உறுத்தலையும், மாற்றத்திற்கான ஒரு தொடக்கத்தையும் விளைவித்த கேள்வி அது. அதன் பிறகு இன்றுவரை எந்த நிகழ்ச்சியானாலும், “தோழர்களே” என்றோ, “நண்பர்களே” என்றோதான் தொடங்குகிறேன். இருபாலர் மட்டுமல்ல, மூன்றாம் பாலினத்தவர் அக்கூட்டத்தில் இருப்பின் அவர்களுக்கும் இந்த விளிப்பு பொருந்தும்.



தாய்மொழி மீதான உணர்ச்சி வசப்படுதலுக்கு இடமளிக்காமல் சிந்தித்துப் பார்த்தால், மொழிகூட இப்படி பெண்ணுக்கு எதிராகவே இருக்கிறது அல்லது அப்படி ஆக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும். “ஆண் - பெண் சமத்துவம்” என்று பேசுகிறபோதும், எழுதுகிறபோதும் கூட ஆணை முதன்மைப்படுத்தி விடுகிறோம். “ஆண்-பெண் வேறுபாடில்லாமல் பழக வேண்டும்” என ஒரு உன்னதத் தோழமையை வலியுறுத்திப் பேசுகிறபோது கூட அங்கே ஆண்தான் முன்னால் வந்து நிற்கிறான்.



“செல்வன்” என்றழைக்கப்படும் குழந்தைப் பருவத்தைத் தாண்டிவிட்டால் ஆணுக்கு நிரந்தரமாக “திரு” பட்டம் கிடைத்துவிடுகிறது. பெண்ணுக்கோ முதலில் “செல்வி” அப்புறம் “குமாரி” அதற்கப்புறம் - அதுவும் திருமண உறவு ஏற்பட்டால் மட்டுமே - “திருமதி” என்று அடையாளம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆங்கில மொழியில், பெண்ணுரிமை இயக்கங்களின் தொடர் போராட்டத்திற்கு ஒரு வெற்றியாக ‘மிஸ்’ ‘மிஸஸ்’ என்ற சொற்களுக்குப் பதிலாக “ம்(மி)ஸ்’’ என்ற உச்சரிப்பு வரும் வகையில் ‘எம்எஸ்’ என்று குறிப்பிடும் பழக்கம் வந்துவிட்டது. தமிழில்? “திருமிகு” என்ற சொல் பொருத்தமானது. சிலரே அதை இருபாலருக்கும் பயன்படுத்துகிறார்கள். எப்போது அது பரவலாகப் பொதுப்பயன்பாட்டிற்கு வரும்?



“மனிதன்” என்று குறிப்பிடும்போதும் ஆண் தன்மை மேலோங்கியிருக்கும் உணர்வுதான் ஏற்படுகிறது. “பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்ததுபோல” என்று நையாண்டியாக உவமை காட்டும்போதும் “பட்டிக்காட்டான்’’ பற்றிக் கூறி, பட்டிக்காட்டுப் பெண்ணை மறந்து விடுகிறோம். நையாண்டியில் கூட விலக்கப்பட்டவள் பெண்! “தொழிலாளி வெகுண்டெழுந்தால் அவன் முன் சுரண்டல் கூட்டம் நிற்க முடியாது” என்று உழைக்கும் மக்களின் எழுச்சியை சொல்லும்போதும் தொழிலாளியை ஆணாகவே வரித்துக் கொள்கிறோம். “ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்’’ என்று முழங்குகிறபோது, நம்மையறியாமல் ஏழைக்கும் அடிமைக்கும் கீழாகப் பெண்ணைத் தள்ளிவிடுகிறோம்.



“வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?” -புகழ்பெற்ற இந்தப் பாடல் ஒரு ஆழ்ந்த தத்துவ விசாரணையில் இறங்குகிறது. ஆனால் மனைவி, பிள்ளை, உறவு என்று அடுக்குகிறபோது ஆணுக்கான துணைகள் பற்றிய கவலையாகத்தானே அது வெளிப்படுகிறது?” “நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்” என்ற மற்றொரு பிரபலமான பாடலும் ஆணுக்கு நல்ல மனைவியும் பிள்ளையும் குடும்பமும் அமைவது பற்றித்தான் அக்கறை கொள்கிறது.



பகுத்தறிவுச் சிந்தனைகளை முழுமனதோடு ஏற்று வாழ்பவர்கள் கூட இப்படிப்பட்ட சொல்லாட்சிகளிலிருந்து தப்பிவிட முடிவதில்லை. புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறவர்கள்கூட பேச்சுவாக்கில், “.... இதனால் இன்று எனக்கு பயனில்லாமல் போகலாம். ஆனால் நாளை என் மகன் பயனடைவான். என் பேரன் பயன்பெறுவான்” என்கிறார்கள். உணர்ந்து செய்யவில்லை என்றாலும்கூட, மகளையும் பேத்தியையும் அவர்கள் மறந்துவிடுவது அவர்கள் அறியாமலே சமுதாயத் திணிப்பின் எச்சம் அவர்களோடு ஒட்டியிருப்பதால்தான்.



மொழி எந்த அளவுக்குப் பெண்ணின் எதிரியாக்கப் பட்டிருக்கிறது என்பதற்கு, தெருச் சண்டைகளின்போது வீசப்படும் “கெட்ட வார்த்தைகள்” சரியான ஆதாரம். குறிப்பாகத் தமிழில் உள்ள அத்தகைய சொற்கள் ஆணின் தாயை, சகோதரியை, மனைவியை இழிவுபடுத்தி அதன் மூலம் உசுப்பேற்றுவதாகவே கையாளப்படுகின்றன.



சண்டை என்று வந்தால்தான் என்றில்லை. சாதாரண முறையில் “ஜாலியாக” பேசிக்கொண்டிருக்கும்போது கூட இந்தச் சொற்கள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. இவ்வளவு ஏன், யாரையாவது எதற்காகவாவது பாராட்டுகிறபோது கூட அவரது தாய் அல்லது சகோதரியுடன் பாலியல் உறவு கொண்டவராக சித்தரிக்கும் சொற்களைப் பொழிந்து புளங்காகிதம் அடைகிறவர்கள் உண்டு.



தாய்மொழியை தாயாகவே கொண்டாடுகிற மண்ணில்தான் இந்த வக்கிரங்கள் “தமிழைப் பழித்தவனை (இங்கே கூட ஆண்!) தாய் தடுத்தாலும் விடேன்” என்ற வீரமிகு கர்ச்சனைகள், மொழி பழிக்கப்படுவது பற்றிச் சீற்றம் கொள்கிற அளவுக்கு தாய் பழிக்கப்படுவது பற்றிக் கண்டுகொள்வதில்லை.



குடும்பப் பொருளாதார நிலைமை காரணமாகவோ, சமூக விரோத சுயநலமிகளின் மிரட்டல் காரணமாகவோ, அறியா வயதில் கடத்திச் செல்லப்பட்டதன் காரணமாகவோ பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களுக்குத்தான் இங்கே “விபச்சாரி” என்ற பெயர். அவர்களைத்தான் “அழகிகள் கைது” என்று வர்ணித்து சில நாளேடுகளில் செய்தி வரும். சில ஆண்களும் சதை வியாபாரத்தில் ஈடுபடுவதாக அவ்வப்போது பரபரப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டாலும், அவர்களுக்கு “விபச்சாரன்’’ அல்லது “அழகன்’’ என்ற தொழிற்பெயர்கள் கிடையாது.



மொழியில் ஆணை முதன்மைப்படுத்திய ஆதிக்கத்தின் உச்சமாகத்தான், மனிதர்கள் கடவுளைப் படைத்தபோது ஆணாகவே வார்த்தனர் போலும். எந்த மதத்திலும் கடவுள் ஆண்பால்தான். பெண் தெய்வங்கள் உண்டென்ற போதிலும், அப்படி “பெண்-தெய்வங்கள்” என்று பிரித்துக் காட்டினால்தான் உண்டு. மற்றபடி தெய்வம், இறைவன், ஆண்டவன் என்ற பொதுச் சொற்களெல்லாம் கடவுளை “எக்ஸ்-ஒய்.” என்றே உருவகிக்கின்றன. (எக்ஸ்-ஒய். என்பது உயிர் வேதியலில் ஆண் உயிரணுக்களுக்கான குறியீட்டு எழுத்தாகும்). நம் வள்ளுவர் கூட “ஆதிபகவன்,” “மலர்மிசை ஏகினான்,” “கெடுக உலகியவற்றியான்” என்றெல்லாம் கடவுளை ஆணாகக் கூறுவதிலிருந்து விலக முடியாதவராகத்தானே இருந்திருக்கிறார்!



இவ்வாறு மொழியும் சொற்களும் ஆணின் அடக்குமுறைக் கருவிகளாய், பெண்ணை ஒடுக்கும் ஆயுதங்களாய் மாற்றப்பட்டது குறித்து ஆய்வு செய்தால் முனைவர் பட்டம் பெறுகிற அளவுக்கு வரலாற்றுத் தகவல்கள் ஏராளமாகக் கிடைக்கும். பாலின சமத்துவத்தைச் செதுக்கி நிலைநாட்டுகிற பேரியக்கத்திற்கு அத்தகைய ஆய்வும் உதவக்கூடும்.