Monday, October 24, 2011

தற்போதைய செய்திகள்உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் விவரம் 2011

சென்னை, அக்.24: தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் பெற்ற மொத்த வாக்குகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
அதிமுக - 2,22,42,131 (74.6%)
திமுக - 36,39,625 (12.2%)
தேமுதிக - 6,22,537 (2.1%)
காங்கிரஸ் - 4,88,342 (1.6%)
பாமக - 3,73,327 (1.3%)
பிஜேபி - 2,03,976 ( 0.7%)
மதிமுக - 1,62,992 (0.5%)
சுயேட்சைகள் - 18,06,407 (6.1%)

Sunday, October 2, 2011

பெண்களெல்லாம் பெரியோரில்லையா?

“பெரியோர்களே, தாய்மார்களே...!’’



- இப்படித்தான் ஆகப் பெரும்பாலான பொதுக் கூட்டங்களில், கருத்தரங்குகளில் தலைவர்களும் மற்ற பேச்சாளர்களும் தங்களது பேச்சைத் தொடங்குகிறார்கள்.



குறிப்பிட்ட பேச்சில், தாங்கள் வலியுறுத்தும் கருத்தில் அவர்களில் எத்தனை பேர் உண்மையான விசுவாசத்துடன் இருக்கிறார்கள், எத்தனை பேர் வெறும் கைதட்டல் மோகத்துடன் பேசுகிறார்கள் என்பது மக்கள் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய மர்மம். இங்கே நாம் விவாதிக்க எடுத்துக் கொள்வது அந்த “பெரியோர்களே தாய்மார்களே’’ என்ற தொடக்க விளிப்புச் சொற்களைப் பற்றிதான்.

தங்களது அனுபவ முதிர்ச்சியால் வழிகாட்டுகிற பெரியோர்களையும், அன்றாடம் வயிற்றில் சிசு, இடுப்பில் தண்ணீர்க்குடம், தோளில் குடும்பம், மனதில் துயரம் என சுமந்து கொண்டே இருக்கிற தாய்மார்களையும் விளித்து, வணங்கி பேச்சைத் தொடங்குவது நல்ல நாகரீகம்தான்.



ஆனால், கேள்வி ‘அப்படியானால் தாய்மார்க ளெல்லாம் பெரியோர்கள் இல்லையா’ என்பதுதான்.



ஆண்களை மட்டுமே “பெரியோர்களே’’ என்ற மரியாதைக்கு உரியவர்களாக முன்னிலைப்படுத்துகிற ஆணாதிக்கச் சிந்தனையின் தாக்கம் இதில் வெளிப்பட வில்லையா? உரையாற்றுகிற அந்த மனிதர் ஆணாதிக்கத்தை எதிர்ப்பவராக, பெண்ணுரிமைக்கு உணர்வுப்பூர்வமாய்க் குரல் கொடுப்பவராகவே கூட இருக்கலாம். ஆனால் அவரையுமறியாமல், சிறு வயதிலிருந்தே கேட்டும் பேசியும் வந்த பழக்கத்தின் காரணமாக இவ்வாறுதான் தமது பேச்சைத் தொடங்குகிறார். இவ்வாறு தாய்மார்களை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியது - பொதுமை சார்ந்த தாய் வழிச் சமூக அமைப்பை உடைமை சார்ந்த தந்தை வழிச் சமூக அமைப்பு ஒடுக்கியதன் ஒரு வெளிப்படையான ‘மொழி அடையாளம்’ எனலாம்.



சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு சிறிய அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நான் பேச அழைக்கப்பட்டேன். சற்று வித்தியாசமாகப் பேச்சைத் தொடங்க எண்ணியவனாக, “நண்பர்களே, சகோதரிகளே’’ என்று விளித்துப் பேசி முடித்தேன். கூட்டம் முடிந்து கலைகிறபோது என்னிடம் வந்த பெண் சிரித்துக்கொண்டே கேட்டாள்: “அதென்ன நண்பர்களே, சகோதரிகளே என்று ஆரம்பித்தீர்கள்? அப்படியானால் நாங்களெல்லாம் உங்களுக்கு நண்பர்கள் இல்லையா?”



சிரித்துக்கொண்டே விடைபெற்றேன் என்றாலும் என் மனதில் ஒரு ஆழமான உறுத்தலையும், மாற்றத்திற்கான ஒரு தொடக்கத்தையும் விளைவித்த கேள்வி அது. அதன் பிறகு இன்றுவரை எந்த நிகழ்ச்சியானாலும், “தோழர்களே” என்றோ, “நண்பர்களே” என்றோதான் தொடங்குகிறேன். இருபாலர் மட்டுமல்ல, மூன்றாம் பாலினத்தவர் அக்கூட்டத்தில் இருப்பின் அவர்களுக்கும் இந்த விளிப்பு பொருந்தும்.



தாய்மொழி மீதான உணர்ச்சி வசப்படுதலுக்கு இடமளிக்காமல் சிந்தித்துப் பார்த்தால், மொழிகூட இப்படி பெண்ணுக்கு எதிராகவே இருக்கிறது அல்லது அப்படி ஆக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும். “ஆண் - பெண் சமத்துவம்” என்று பேசுகிறபோதும், எழுதுகிறபோதும் கூட ஆணை முதன்மைப்படுத்தி விடுகிறோம். “ஆண்-பெண் வேறுபாடில்லாமல் பழக வேண்டும்” என ஒரு உன்னதத் தோழமையை வலியுறுத்திப் பேசுகிறபோது கூட அங்கே ஆண்தான் முன்னால் வந்து நிற்கிறான்.



“செல்வன்” என்றழைக்கப்படும் குழந்தைப் பருவத்தைத் தாண்டிவிட்டால் ஆணுக்கு நிரந்தரமாக “திரு” பட்டம் கிடைத்துவிடுகிறது. பெண்ணுக்கோ முதலில் “செல்வி” அப்புறம் “குமாரி” அதற்கப்புறம் - அதுவும் திருமண உறவு ஏற்பட்டால் மட்டுமே - “திருமதி” என்று அடையாளம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆங்கில மொழியில், பெண்ணுரிமை இயக்கங்களின் தொடர் போராட்டத்திற்கு ஒரு வெற்றியாக ‘மிஸ்’ ‘மிஸஸ்’ என்ற சொற்களுக்குப் பதிலாக “ம்(மி)ஸ்’’ என்ற உச்சரிப்பு வரும் வகையில் ‘எம்எஸ்’ என்று குறிப்பிடும் பழக்கம் வந்துவிட்டது. தமிழில்? “திருமிகு” என்ற சொல் பொருத்தமானது. சிலரே அதை இருபாலருக்கும் பயன்படுத்துகிறார்கள். எப்போது அது பரவலாகப் பொதுப்பயன்பாட்டிற்கு வரும்?



“மனிதன்” என்று குறிப்பிடும்போதும் ஆண் தன்மை மேலோங்கியிருக்கும் உணர்வுதான் ஏற்படுகிறது. “பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்ததுபோல” என்று நையாண்டியாக உவமை காட்டும்போதும் “பட்டிக்காட்டான்’’ பற்றிக் கூறி, பட்டிக்காட்டுப் பெண்ணை மறந்து விடுகிறோம். நையாண்டியில் கூட விலக்கப்பட்டவள் பெண்! “தொழிலாளி வெகுண்டெழுந்தால் அவன் முன் சுரண்டல் கூட்டம் நிற்க முடியாது” என்று உழைக்கும் மக்களின் எழுச்சியை சொல்லும்போதும் தொழிலாளியை ஆணாகவே வரித்துக் கொள்கிறோம். “ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்’’ என்று முழங்குகிறபோது, நம்மையறியாமல் ஏழைக்கும் அடிமைக்கும் கீழாகப் பெண்ணைத் தள்ளிவிடுகிறோம்.



“வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?” -புகழ்பெற்ற இந்தப் பாடல் ஒரு ஆழ்ந்த தத்துவ விசாரணையில் இறங்குகிறது. ஆனால் மனைவி, பிள்ளை, உறவு என்று அடுக்குகிறபோது ஆணுக்கான துணைகள் பற்றிய கவலையாகத்தானே அது வெளிப்படுகிறது?” “நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்” என்ற மற்றொரு பிரபலமான பாடலும் ஆணுக்கு நல்ல மனைவியும் பிள்ளையும் குடும்பமும் அமைவது பற்றித்தான் அக்கறை கொள்கிறது.



பகுத்தறிவுச் சிந்தனைகளை முழுமனதோடு ஏற்று வாழ்பவர்கள் கூட இப்படிப்பட்ட சொல்லாட்சிகளிலிருந்து தப்பிவிட முடிவதில்லை. புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறவர்கள்கூட பேச்சுவாக்கில், “.... இதனால் இன்று எனக்கு பயனில்லாமல் போகலாம். ஆனால் நாளை என் மகன் பயனடைவான். என் பேரன் பயன்பெறுவான்” என்கிறார்கள். உணர்ந்து செய்யவில்லை என்றாலும்கூட, மகளையும் பேத்தியையும் அவர்கள் மறந்துவிடுவது அவர்கள் அறியாமலே சமுதாயத் திணிப்பின் எச்சம் அவர்களோடு ஒட்டியிருப்பதால்தான்.



மொழி எந்த அளவுக்குப் பெண்ணின் எதிரியாக்கப் பட்டிருக்கிறது என்பதற்கு, தெருச் சண்டைகளின்போது வீசப்படும் “கெட்ட வார்த்தைகள்” சரியான ஆதாரம். குறிப்பாகத் தமிழில் உள்ள அத்தகைய சொற்கள் ஆணின் தாயை, சகோதரியை, மனைவியை இழிவுபடுத்தி அதன் மூலம் உசுப்பேற்றுவதாகவே கையாளப்படுகின்றன.



சண்டை என்று வந்தால்தான் என்றில்லை. சாதாரண முறையில் “ஜாலியாக” பேசிக்கொண்டிருக்கும்போது கூட இந்தச் சொற்கள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. இவ்வளவு ஏன், யாரையாவது எதற்காகவாவது பாராட்டுகிறபோது கூட அவரது தாய் அல்லது சகோதரியுடன் பாலியல் உறவு கொண்டவராக சித்தரிக்கும் சொற்களைப் பொழிந்து புளங்காகிதம் அடைகிறவர்கள் உண்டு.



தாய்மொழியை தாயாகவே கொண்டாடுகிற மண்ணில்தான் இந்த வக்கிரங்கள் “தமிழைப் பழித்தவனை (இங்கே கூட ஆண்!) தாய் தடுத்தாலும் விடேன்” என்ற வீரமிகு கர்ச்சனைகள், மொழி பழிக்கப்படுவது பற்றிச் சீற்றம் கொள்கிற அளவுக்கு தாய் பழிக்கப்படுவது பற்றிக் கண்டுகொள்வதில்லை.



குடும்பப் பொருளாதார நிலைமை காரணமாகவோ, சமூக விரோத சுயநலமிகளின் மிரட்டல் காரணமாகவோ, அறியா வயதில் கடத்திச் செல்லப்பட்டதன் காரணமாகவோ பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களுக்குத்தான் இங்கே “விபச்சாரி” என்ற பெயர். அவர்களைத்தான் “அழகிகள் கைது” என்று வர்ணித்து சில நாளேடுகளில் செய்தி வரும். சில ஆண்களும் சதை வியாபாரத்தில் ஈடுபடுவதாக அவ்வப்போது பரபரப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டாலும், அவர்களுக்கு “விபச்சாரன்’’ அல்லது “அழகன்’’ என்ற தொழிற்பெயர்கள் கிடையாது.



மொழியில் ஆணை முதன்மைப்படுத்திய ஆதிக்கத்தின் உச்சமாகத்தான், மனிதர்கள் கடவுளைப் படைத்தபோது ஆணாகவே வார்த்தனர் போலும். எந்த மதத்திலும் கடவுள் ஆண்பால்தான். பெண் தெய்வங்கள் உண்டென்ற போதிலும், அப்படி “பெண்-தெய்வங்கள்” என்று பிரித்துக் காட்டினால்தான் உண்டு. மற்றபடி தெய்வம், இறைவன், ஆண்டவன் என்ற பொதுச் சொற்களெல்லாம் கடவுளை “எக்ஸ்-ஒய்.” என்றே உருவகிக்கின்றன. (எக்ஸ்-ஒய். என்பது உயிர் வேதியலில் ஆண் உயிரணுக்களுக்கான குறியீட்டு எழுத்தாகும்). நம் வள்ளுவர் கூட “ஆதிபகவன்,” “மலர்மிசை ஏகினான்,” “கெடுக உலகியவற்றியான்” என்றெல்லாம் கடவுளை ஆணாகக் கூறுவதிலிருந்து விலக முடியாதவராகத்தானே இருந்திருக்கிறார்!



இவ்வாறு மொழியும் சொற்களும் ஆணின் அடக்குமுறைக் கருவிகளாய், பெண்ணை ஒடுக்கும் ஆயுதங்களாய் மாற்றப்பட்டது குறித்து ஆய்வு செய்தால் முனைவர் பட்டம் பெறுகிற அளவுக்கு வரலாற்றுத் தகவல்கள் ஏராளமாகக் கிடைக்கும். பாலின சமத்துவத்தைச் செதுக்கி நிலைநாட்டுகிற பேரியக்கத்திற்கு அத்தகைய ஆய்வும் உதவக்கூடும்.