Tuesday, May 8, 2018

மூலிகையின் பெயர் -: பனை.


 மூலிகையின் பெயர் -: பனை.
2. தாவரப் பெயர் -: BORASSUS FLABELLIFERA.
3. தாவரக்குடும்பம் -: ARECACEAE.
4. வகைகள் -: இது கூந்தல் பனை, மற்றும் கரும்பனை என இரு வகைப்படும்.
5. பயன் தரும் பாகங்கள் -: நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.
4. வளரியல்பு -: பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் தமிழ் நாட்டிலும், ஜாப்னா மற்றும் இலங்கையிலும் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
5. மருத்துவப் பயன்கள்- பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.
பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.
நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.
பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.
பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.
பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.
கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.
அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்


ஒரு கிராமத்து சிறுவனின் நினைவலைகள் : ஒற்றை பனை

 பனைமரம் தமிழரின் வாழ்விலும், மரபிலும் ஒன்றோடு ஒன்றாக கலந்தது. கிராமத்து வீடுகள் பனை சார்ந்த பொருட்க்களால் கட்டப்பட்டிருக்கும். செம்மண் சுவர் எழுப்பி அதன் மீது பனங்கை வைத்து அதன் மீது பனை ஓலை வேயப்பட்டுஇருக்கும். பனை நாரை கொண்டு பனை ஓலையையும் , பனங்கையும் இணைக்கப்பட்டுஇருக்கும். இந்த கூரை வீடானது வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் மழை காலத்தில் கன கனவென்று இருக்கும். அது பனை மரத்துக்கும் செம்மண்ணுக்கும் உள்ள குணாதிசயம்.

கண்மாய் ஓரங்களில் உள்ள ஒற்றை பனைமரம் எப்போதும் தனது ஓலை மட்டையால் பேசிக்கொண்ட இருக்கும், நாங்கள் குளித்து விட்டு நடந்து வருகையில் பனை மட்டையின் உரசல் யாரோ பின்னாலிருந்து கூப்பிடுவது போல் இருப்பதால் அரண்டு அடித்து ஓடிவந்து, இரவில் காய்ச்சல் வரும் அளவில் பயந்து போய்விடுவோம்.  அப்புறம் அதற்கு தனியாக தூன்னுர்(திருநீர்) போட செவ்வாய், வெள்ளிகளில் வரிசையாக கொழும்பர்(கொழும்பு சென்று வந்தால் அவர்க்கு கொழும்பர் என்று பெயர்  ) வீட்டில் காத்து இருப்போம்.

 கோடை விடுமுறை நாட்களில் சரியாக பனைமரங்கள் காய்க்க தொடங்கி விடும். 25 பைசாவுக்கு ஒரு நூங்கு வாங்கி குடித்து விட்டு, இரண்டு நூங்கை கூடு வைத்து நூங்கு வண்டி ஒட்டிய சந்தோசம் இன்று எந்த வண்டி ஒட்டி போனாலும் கிடைக்காது. கோடை வெயிலின் உக்கரத்தின் பயனாக வேர்க்குரு வந்து விடும், அதற்கு நூங்கின் சாற்றை பூசிக்கொள்ளுவது ஒரு மிகசிறந்த மருத்துவம். இந்த மருத்துவ யுக்திகள் இயல்பாகவே கிராமத்தின் காற்றில் கலந்து இருக்கும் போல.

நுங்கு சீசன் முடிந்து வெட்டாமல் விட்ட காய்கள், பனம் பழமாகி காற்றின் கைவண்ணத்தில் கீழே விழுந்து மணம் பரப்பி கொண்டுஇருக்கும். பனம் பழத்தின் வாடைக்கு முன்னால் எந்த பழமும் நிற்க முடியாது, பனம் பழம் சாப்பிட்டுவிட்டு, நார் ஒட்டிய வாயுடன் பள்ளி சென்று அமர்வோம். காற்றில் சீவிய தலை கலைந்து இருந்தால், தலையை சப்பிப்போட்ட பனகொட்டை மாதிரி இருக்கு என்று கேலி செய்வதுண்டு..

பனை மரத்தின் ஓலைகளில், துக்கனங் குருவிகள் தனது கூட்டை அந்த வருடத்தின் பருவக்காற்றின் நிலைக்கு ஏற்றவாறு அமைத்து இருக்கும். கூட்டின் வாய் பகுதி வடக்கு திசையை நோக்கி இருந்தால் அந்த வருடம் வடமேற்கு பருவமழை சுமாராக தான் இருக்கும், அதே போல் கூட்டின் வாய்ப்பகுதி தென் திசையை நோக்கி இருந்தால் , தென் மேற்கு பருவ மழை சுமாராக இருக்கும் என்று குருவியின் கூட்டை வைத்து கிராமத்து கிழவர்கள் கணிப்பார்கள்.  அந்த கணிக்கும் வித்தை குருவிக்கு கற்று கொடுத்தது யார்?. இயற்கையை மிஞ்சிய ஆசான் யாரும் இல்லை இந்த பூவுலகில்.
 துக்கனங் குருவியின் கூட்டின் அமைப்பை போன்று எந்த ஒரு என்ஜினீயரால் வடிவமைத்து கட்ட முடியாது, குருவி கூட்டை கட்டி முடித்து கடைசியில் ஒரு களிமண் உருண்டையே எடுத்து கூட்டின் ஓரத்தில் வைத்து விடும், அப்புறம் எங்கோ தேடி பிடித்து ஒரு மின்மினி பூச்சியை பிடித்து வந்து களிமண்ணில் பதித்து விடும், வீட்டிற்கு முதன் முதலில் விளக்கு வைக்க வேண்டும் என்று சிந்தித்தது மின்மினி பூச்சியாக தான் இருக்கும்.  துக்கனங் குருவியின் கூட்டை எடுத்து பார்த்தால் குருவி எந்த இடத்தில ஆரம்பித்து எந்த இடத்தில் முடித்து இருக்கும் என்று அறிய முடியாது. ஐந்தறிவு பறவை ஆறறிவு மனிதனுக்கு விடும் சவால் தான் இது..



பனங்கிழங்கு, பதநீர் போன்ற சுவை மிகுந்த பொருட்களுக்கு இணையான ஒரு பொருளை எந்த வேதியல் கூடத்திலும் உருவாக்க முடியாது. பன ஓலையை ஸ்பூன் செய்து சுட சுடச் மொச்சை சிந்தாமணி அரசம் இழையில் வைத்து சாப்பிட பொழுதுகள் மீண்டு வராது.

பனை ஓலையில் மூலிகை சாற்றை பூசி, எழுத்தாணி கொண்டு எழுதி இருக்கிறார்கள். காலம் காலமாக பனை மரம் தனது அடி முதல் நுனி வரை இந்த மனித சமூகத்திற்கு பலன் கொடுத்து வந்து இருக்கிறது. பனை நார் கொண்டு பின்ன பட்ட கூடைகள், கடகா பெட்டிகள், கிளு கிளுப்பைகள், ஓல கொட்டன்கள் இப்பொழுது கிராமத்தில் கூட பயன் படுத்தாமல் இருப்பது வேதனையான ஒரு விஷயம். கூடிய விரைவில் இவை அனைத்தும் மியூசியத்தில் பார்க்கலாம்.



பனை மரத்தின் பயன் அறிந்தும், இன்று பனைமரம் வெட்டி சாய்த்து செங்கல் சூளைகளில் எரிந்து சாம்பலாகிவிடுகிறது. இன்றய சூழலில், பணத்திற்காக எல்லாத்தையும் விற்கும் மனநிலையும், Use and throw கலாச்சாரமும் பனை மரத்தையும் பதம் பார்த்து கொண்டு இருக்கிறது.

பனை மரத்தை நட்டு, பராமரித்து அடுத்த தலை முறையிடம் கொடுப்பது, நமக்கு பனை கொடுத்த பலனுக்கு கைமாறக இருக்கும்.

Wednesday, April 25, 2018

கம்மங்கூழ்* ' குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் எண்ணிலடங்காதவை

தினமும் காலையில் 2 டம்ளர் ' *கம்மங்கூழ்* ' குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் எண்ணிலடங்காதவை!

வாங்க, தெரிஞ்சிக்கலாம்!

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று தான் கம்மங்கூழ். 10 வருடங்களுக்கு முன்பு வரை கம்மங்கூழ் அனைவரது வீட்டிலும் சாதாரணமாக தயாரித்து குடித்து வந்தோம். ஆனால் தற்போது இந்த கம்மங்கூழ் அரிய பானமாக தள்ளுவண்டியில் விற்கப்பட்டு வருகிறது. இன்று வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. கோடைக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் பலர் அதிக வெப்பத்தால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். குறிப்பாக நிறைய பேர் உடல் சூட்டினால் கஷ்டப்படுவார்கள்.

இந்த உடல் சூட்டைத் தணிப்பதற்கு ஏராளமான பானங்கள், மருந்துகள் போன்றவை விற்கப்படுகின்றன. முந்தைய காலத்தில் எல்லாம் நிறைய பானங்கள், மருந்துகள் எல்லாம் இல்லை. நம் முன்னோர்கள் வெயிலால் ஏற்படும் தாக்கத்தைத் தணிப்பதற்கு பழங்காலம் முதலாக கம்மங்கூழைத் தான் குடித்து வந்தார்கள்.

தானிய வகைகளுள் ஒன்றான் கம்புவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதில் 15% புரோட்டீன் மற்றும் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், நியாசின், தையமின், ரிபோஃப்ளேவின் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதோடு அத்தியாவசியமான அமினோ அமிலங்களான மெத்தியோனைன் மற்றும் லிசித்தின், கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவகளும் அடங்கியுள்ளன.

இப்போது கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் காலையில் கண்ட உணவுகளை உட்கொள்ளாமல், கம்மங்கூழைத் தயாரித்துக் குடியுங்கள். முக்கியமாக கம்மங்கூழ் தயாரிப்பது மிகவும் எளிமையானது. அதுவும் இரவில் தயாரித்து, மறுநாள் காலையில் குடிக்க வேண்டிய பானம் என்பதால், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற அற்புதமான காலை உணவாகவும் இருக்கும்.

வெயில் காலத்தில் உடல் சூட்டால் நிறைய பேர் கஷ்டப்படுவார்கள். இந்த உடல் சூட்டைத் தணிப்பதற்கு இளநீருக்கு அடுத்தப்படியாக சிறந்த பானம் என்றால் அது கம்மங்கூழ் தான். ஒருவர் கம்மங்கூழை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாகாமல் சீராக பராமரிக்கப்படும். அதோடு கம்மங்கூழ் உடலுக்கு உடனடி ஆற்றலையும் வழங்கும்.

கம்புவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த செல்களின் உற்பத்திக்கு அவசியமான ஓர் முக்கிய சத்தாகும். இந்த கம்மங்கூழை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அது *இரத்த சோகையை சரிசெய்யும்* . எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க நினைத்தால், கம்மங்கூழை தினமும் குடித்து வாருங்கள்.

கம்மங்கூழை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், அது உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவும். இது இரத்தத்தின் அடர்த்தியைத் தடுத்து, இரத்தம் உறைவதைத் தடுத்து, *பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.*

கம்புவில் உள்ள பி வைட்டமின்கள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களை உடைத்தெறிய உதவும். இது இரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டைன் அளவைக் குறைத்து, *கொலஸ்ட்ரால்கள் உடலில் படிவதைத் தடுக்கும்* . கம்புவில் உள்ள நியாசின் இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் தேங்குவதைத் தடுத்து, இரத்தத்தில் உள்ள *நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.*

கம்மங்கூழில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம், பசியுணர்வைக் குறைத்து, *உடல் எடையைப் பராமரிக்க உதவும்.* மேலும் இது மெதுவாக செரிமானமாவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். கம்புவில் உள்ள அதிகமான நார்ச்சத்து, அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கும். எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், கம்மங்கூழை தினமும் காலையில் குடியுங்கள்.

கம்புவில் உள்ள நார்ச்சத்து மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், *குடல் புற்றுநோயின்* அபாயத்தைக் குறைக்கும். இதில் உள்ள லிக்னன் என்னும் பைட்டோநியூட்ரியண்ட், குடலில் மமாலியன் லிக்னனான மாற்றப்பட்டு, *மார்பக புற்றுநோயில்* இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

கம்புவில் உள்ள மக்னீசியம், தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். அதாவது இது இரத்த நாள சுவற்றை தளர்வடையச் செய்து, இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையைத் தடுத்து, *உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்* . மேலும் கம்பு தீவிரமான *ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலியையும் குறைக்கும்* .

கம்புவில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது செரிமான செயல்பாட்டை தாமதப்படுத்தி, *இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கும்.* சர்க்கரை நோய் உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடித்தால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும். முக்கியமாக *டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது* .

கம்புவில் உள்ள ட்ரிப்டோஃபேன், உடலில் செரடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். தினமும் இரவில் படுக்கும் முன் ஒருவர் ஒரு கப் கம்மங்கூழைக் குடித்தால், மன அழுத்தம் குறைந்து, இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

கம்புவில் மக்னீசியம் அதிகம் உள்ளது. எனவே பெண்கள் கம்மங்கூழைக் குடித்து வந்தால், *மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்களைத் தடுக்கலாம்* . எனவே நீங்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாயின் போது வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்தால், தினமும் காலையில் கம்மங்கூழைக் குடித்து வாருங்கள்.

கம்புவில் கால்சியம் சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. கம்மங்கூழை ஒருவர் அன்றாடம் தவறாமல் குடித்து வந்தால், அதில் உள்ள கால்சியம் எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து, *எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்* . முக்கியமாக *ஆர்த்ரிடிஸ்* மற்றும் எலும்பு முறிவு உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடிப்பது மிகவும் நல்லது.